நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘சைத்ரா’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறார் இசையமைப்பாளர் பிரபாகரன் மெய்யப்பன். இவரைப் பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள அவரை சந்தித்தோம்.
இசையமைப்பாளராவதற்காக கடந்து வந்த பாதை..?
கல்லூரியில் படிக்கும் காலகட்டத்திலேயே முறைப்படி கர்நாடக சங்கீதம் மற்றும் மேற்கத்திய சங்கீதத்தை கற்றுக் கொண்டேன். பெற்றோர்களின் விருப்பத்திற்காக தனியார் நிறுவனத்தில் சில காலம் பணியாற்றினேன். இருப்பினும் இசை மீது இருந்த பேரார்வத்தின் காரணமாக இசையமைப்பாளராக வேண்டும் என திட்டமிட்டேன். 2012 ஆம் ஆண்டில் முதன்முதலாக குறும்படத்திற்கு இசையமைக்க தொடங்கினேன். அதன் பிறகு தற்போது வரை 150 க்கும் மேற்பட்ட குறும்படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். இதில் 50-க்கும் மேற்பட்ட குறும்படங்களுக்கு சிறப்பாக இசையமைத்ததற்காக விருதுகளையும் வென்றிருக்கிறேன்.
இதைத்தொடர்ந்து ‘முஸ்தபா -தி மேஜிசியன்’ எனும் அனிமேஷன் திரைப்படத்திற்கு இசையமைத்தேன். இந்தத் திரைப்படம் 2016 ஆம் ஆண்டில் ஆஸ்கார் விருதுக்கான சிறந்த அனிமேஷன் படப் பிரிவில் போட்டியிட்டது. இதனைத் தொடர்ந்து ‘மேகி’ எனும் படத்திற்கு பின்னணி இசையமைத்தேன். தற்போது இயக்குநர் எம். ஜெனித் குமார் இயக்கத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்து வரும் ‘சைத்ரா’ படத்திற்கு இசையமைத்திருக்கிறேன். இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்தப் திரைப்படத்தில் இடம் பெற்ற சிங்கிள் ட்ராக்கும் வெளியாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
எதிர்கால இலக்கு?
இசைத்துறையில் முத்திரை பதிக்க வேண்டும். இசை என்பது பெருங்கடல். இங்கு சாதித்தவர்கள் ஏராளம். திரையிசை, சுயாதீன பாடல்கள் என அனைத்து இசை வடிவங்களிலும் தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி சிறந்த இசையமைப்பாளராக முன்னேற வேண்டும்.