சென்னை எண்ணூர் கத்திவக்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதாகவும், முதல்வரின் இரு மொழி கொள்கைக்கு பெரும் வரவேற்பு உள்ளதாகவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

சென்னை எண்ணூர் கத்திவாக்கத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் சென்னை மாநகராட்சி மற்றும் ராயல் என்பீல்டு நிறுவனம் இணைந்து எண்ணூர் ஆல் இந்தியா ரேடியோ நகரை சேர்ந்த 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்..,
”சென்னை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் நோய்த்தொற்றை கட்டுக்குள் வைக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 5,600 பேர் வரை தொற்றால் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்

சென்னையில் அதிகளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள காய்ச்சல் முகாம்கள் மூலமாக ஆரம்ப நிலையிலேயே கொரோனா கண்டறியபடுவதால் கொரோனா பரவலை தடுப்பது எளிதாக உள்ளது.

தமிழகத்தில் தினமும் நடத்தப்படும் கொரோனா பரிசோதனைகளில் 10 சதவிகித பாதிப்பு தான் தற்போது உள்ளது.

தமிழகத்தில் இரு மொழி கொள்கை தான் கடைபிடிக்கப்படும் என அறிவித்த முதல்வரின் அறிவிப்பை அனைத்து கட்சியினரும் வரவேற்றுள்ளனர்.

கல்வி கொள்கையை ஆராய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கைக்கு பின்னர் அதுகுறித்து முடிவு எடுக்கப்படும். தமிழக கல்வி முறையில் கட்டாய மொழி திணிப்பை எதிர்க்கிறோமே தவிர பிற மொழிகளைக் கற்பதில் எந்த தடையுமில்லை
இவ்வாறு உதயகுமார் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி,முன்னாள் எம்.எல்.ஏ கே.குப்பன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.