இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், யோகாவின் பயன்கள் குறித்து முனைவர் Dr.பிளாரன்ஸ் ஹெலன் நளினி பேசியுள்ளார்.
Dr.பிளாரன்ஸ் ஹெலன் நளினி கல்வியாளராகவும், உளவியல் நிபுணராகவும் சேவை செய்து வருகிறார். ஸ்ரேயாஸ் குளோபல் அகாடமியின் நிறுவனரான இவர், அந்த அமைப்பின் இயக்குநராகவும் இருக்கிறார். இவர் யோகா பயிற்சியும், பிரானிக் ஹீலராகவும், ஹோல்னஸ் அமைப்பின் பயிற்சியாளராகவும் இருக்கிறார்.
யோகா பற்றி Dr.பிளாரன்ஸ் ஹெலன் நளினி பேசியதாவது:
நாம் ஒவ்வொருவரும் அரை மணி நேரமாகவது யோகா செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். நமது மனம் ஆற்றலை உற்பத்தி செய்கிறது. உடல் வலிமையை உற்பத்தி செய்கிறது. ஆன்மா நமக்குள் அன்பை உற்பத்தி செய்கிறது. இந்த உடல், மனம், ஆன்மா மூன்றையும் ஒன்று சேர கட்டுப்பாட்டி வைத்துக்கொள்வது யோகாவால் மட்டுமே முடியும்.
யோகா பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ளும்பொழுது உங்களது உடல் மற்றும் மனம் அனைத்தும் ஒரு புத்துணர்ச்சி பெரும். இன்றைய வாழ்வியல் சூழலில் இந்த பயிற்சியானது அனைவருக்கும் மிகவும் அவசியமாகிறது. எப்பொழுதும் நாம் ஒரு முடிவை அவசர அவசரமாக எடுத்தால் அந்த முடிவு சரியானதாக இருக்காது. அமைதியான மனநிலையில் தெளிவான சிந்தனையில் நாம் சிந்தித்து எடுக்கும் முடிவு நமக்கு கண்டிப்பாக வெற்றியை தரும் அந்த வெற்றிக்கு யோகா பயிற்சியானது உதவும். எப்பொழுதும் வாழ்வில் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட கவனக்குவிப்பு ஆற்றல் தேவைப்படுகிறது. அந்த சக்தியை பெற்றுக் கொள்வதற்கு யோகா பயிற்சி பெரிதும் உதவி கரமானதாக இருக்கிறது.
நான் அன்றாட வாழ்வியல் முறையில் ஏற்பட்ட மாற்றங்களால் உடலில் நச்சுத்தன்மை அதிகமாக இருக்கும். அந்த நச்சுக்களை வெளியேற்றாவிட்டால் அது உடலிலேயே தங்கிவிடும். அவற்றை வெளியேற்ற யோகா பயிற்சிகள் உதவுகின்றன. இன்றைய சூழ்நிலையில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் உடல் பருமன் ஏற்படுகிறது. நம் உடலைக் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு.நடை பயிற்சி என்பது எவ்வளவு அவசியமோ யோகா பயிற்சியும் அவசியமே. யோகாவினால் உடல்நலம் சீராகும். யோகாவால் உங்கள் உடல் இளமையாக இருக்கும். அழகாகும். உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்ட போது நானும் மரணப்படுக்கைக்கு தள்ளப்பட்டேன். ஆனால் என்னை யோகா காப்பாற்றியது. இதை உதாரணமாக எடுத்துக்கொண்டு அனைவரும் தினமும் யோகா செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.