சென்னையில் அகில உலக சைவர்கள் கூட்டமைப்பு பேரணி நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த கோயம்பேடு குருங்காலீஸ்வரர் கோயில் அருகே பேரணி நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கூட்டமைப்பு நிர்வாகிகள், 63 நாயன்மார்களுக்கு குரு பூஜை நாளில் விழா எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மாவட்டங்கள் தோறும் வழிப்பாட்டு மையங்கள் உருவாக்கி ஆண், பெண் பேதமின்றி சிவவழிபாடு செய்ய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை ஒதுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அனைத்து கோயில்களிலும் தமிழ் இசை வாத்தியங்களான திருச்சின்னம், உடல், கொப்புத்தாரை, தாளம், எக்காளம், கொக்கரை, சங்கு போன்ற கருவிகளை இசைக்க அரசாணை வெளியிடவேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
268 பாடல் பெற்ற தளங்களில் சிவனடியார்களும் பொதுமக்களும் சென்று வழிபாடு நடத்துவதற்கு வேண்டிய போக்குவரத்து வசதியை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
268 பாடல் பெற்ற தலங்களின் ஊர் பெயர் பலகையை தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இறைவன், இறைவி பெயர்களோடு வைக்க அரசு ஆவணம் செய்ய வேண்டும்.
தமிழர்களின் பாரம்பரிய இசைக் கருவிகளை வாசிக்க மாவட்டம் தோறும் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி அளித்து இசைக் கலையை அனைத்து ஊர்களிலும் கொண்டு சென்று அனைத்து ஆலயங்களிலும் பயிற்சி பெற்றவர்களை பணியமர்த்த இந்து சமய அறநிலையத் துறைக்கு கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பாழடைந்த மற்றும் பராமரிப்பு இல்லாத ஆலயங்களில் சிவனடியார்கள் மூலம் உழவாரப் பணியை செய்ய கொடுக்கப்படும் அனுமதியை இணையதளம் மூலமாக கொடுக்கிற முறையை அனைத்து ஆலயங்களிலும் செயல்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சிவாலயங்களில் பிற்காலத்தில் தவிர்க்கப்பட்ட விழாக்களை ஆய்வு செய்து அந்த விழாக்களை மீண்டும் செய்வதற்கான முயற்சிகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
முன்னதாக அகில உலக சைவர்களின் கூட்டமைப்புக்கு 9 நிர்வாகிகள், 20 பொறுப்பாளர்கள், 7 செயற்குழு உறுப்பினர்கள் அறிமுகம் செய்யப்பட்டார்கள். இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் சைவர்கள் கூட்டமைப்பு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பில் இணைந்து செயல்பட அனைத்து அடியார்களையும் வரவேற்பதாக கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர். தொடர்புக்கு: 9841465363, 7358582931, 9840100100 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.