
சென்னை, செப்டம்பர் 20: சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் சி.வெற்றிவேல் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் மதுரையில் ஏம்.ஏ.,பி.எட்.,எம்.பில் படித்தேன். தமிழ் ஆர்வலரான நான் 1330 திருக்குறளையும் மனப்பாடமாக ஒப்பிக்கும் வகையில், நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கியுள்ளேன். திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற பல தமிழ் இலக்கியங்களை சிறந்த முறையில் கற்றுள்ளேன். நான் முன்னாள் சபாநாயகர் தமிழ்க்குடிமகனின் மாணவர்.
சென்னை அண்ணாநகரில் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் தமிழ்த்துறையில் 33 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன். எனது வீட்டில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் ஆகியவற்றை அனைவரும் படித்து பயன்பெறும் விதமாக நூலகம் வைத்துள்ளேன். எனது இலக்கிய ஆர்வத்தை பல ஊடகங்களும் பாராட்டியுள்ளன.
என்னால் வீடு வாங்க முடியாததால் நான் சிறுக சிறுக சேமித்த ரூ.17 லட்சம் பணத்தை கொடுத்து இரண்டு படுக்கையறை வசதி கொண்ட ஒரு வீட்டை ஒத்திக்கு எடுத்து வசித்து வந்தேன். அந்த வீட்டின் உரிமையாளர் வங்கியில் கடன் வாங்கி அதனை கட்டாமல் விட்டதால் வங்கியே அந்த வீட்டை எடுத்துக்கொண்டது. என்னையும் வெளியே அனுப்பி விட்டனர்.
நான் ஒத்திக்கு கொடுத்த பணம் ரூ.17 லட்சத்தை வீட்டு உரிமையாளர் திருப்பி தரவில்லை. வங்கியும் என்னுடைய பணம் எனக்கு கிடைக்கும் முன்பே என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டது. இதுபற்றி போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்த போது அண்ணாநகர், திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் 2 போலீசார் என்னை மோசமாக நடத்தியதோடு, அடித்து அவமானப்படுத்தினார்கள். நான் வயதானவன், தமிழ் ஆசிரியர். தமிழ் ஆர்வலரான என்னை தமிழ்நாட்டில் தமிழக போலீசாரே அவமானப்படுத்தியதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இது சம்பந்தமான மனித உரிமை ஆணையம், சென்னை மாவட்ட கலெக்டர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம், 13 ஆம் குற்றவியல் நீதிமன்றம், உயர்நீதிமன்றம், முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகிய அனைத்து துறைகளிலும் புகார் மனு அளித்ததுள்ளேன். ஆனால் கடந்த 2 வருடங்களாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நான் மூத்த குடிமகன், தமிழ் ஆசிரியர் என்பதையும் பாராமல் என்னை ஏமாற்றிய வீட்டு உரிமையாளர் முருகன் என்பவரிடம் போலீசார் லஞ்சம் வாங்கி கொண்டு, அவருக்கு சாதகமாக ஒரு தமிழ் ஆசிரியரான என்னை அவமானப்படுத்தியது எந்த விதத்தில் நியாயம்.
எனது வீட்டில் கலைஞர் நூலகம் என்ற ஒரு நூலகம் நடத்தி வந்தேன். அந்த நூலகத்தில் கிட்டத்தட்ட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. அந்த புத்தகங்கள் அனைத்தையும் போலீசார் சூறையாடி விட்டனர். அந்த போலீசார் ஒரு ரவுடி கும்பல் போல செயல்பட்டனர். என்னை தாக்கியது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.
போலீசார் என்னை தாக்கியதற்கு நியாயம் கிடைக்க வேண்டும். வீட்டு உரிமையாளரிடம் இருந்து எனது பணம் ரூ.17 லட்சத்தை மீட்டுத்தர வேண்டும். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் அவர்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காகத்தான் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் மனு கொடுத்துள்ளேன். முதலமைச்சரின் நடவடிக்கையால் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:-
சி.வெற்றிவேல் எம்.ஏ. பி.எட், எம்.பில்.,
தமிழ் ஆசிரியர்
கைப்பேசி: 98401 31457