சென்னை ஜூன் 11 : கோயில் நிலங்கள் குறித்த விவரங்களை இணையத்தில் வெளியிடுவது போல பஞ்சமி நிலம் பற்றிய விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவர் இளமுருகு முத்து வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கோயில் நிலங்களை மீட்பதில் கடந்த சில நாட்களாக சிறப்பாக செயல்பட்டு வருவதை பார்க்கமுடிகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணையை ஏற்று அந்த துறையின் அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆக்கிரமிப்பில் உள்ள நான்கு லட்சம் ஏக்கர் கோயில் நிலங்களை பற்றிய விவரங்களை இளையதளத்தில் வெளியிட போவதாக அறிவித்துள்ளார்.
அதே வேளையில் , பஞ்சமி நிலத்தை மீட்க அதிமுக அரசு போதிய நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பதையும் பஞ்சமி நிலம் பற்றிய விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடவில்லை என்பதையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1892 ஆம் ஆண்டு தலித் மக்களுக்கு நிலம் கொடுக்கப்பட வேண்டும் என்கிற சட்டம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி, இந்தியா முழுவதும் தலித் மக்களுக்கு பஞ்சமி நிலம், டி.சி. நிலம் என்ற பெயரில் இலவசமாக நிலம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் மட்டும் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலம் தலித் மக்களுக்கு வழங்கப்பட்டது.
1844 முதல் அடிமைத்தனம் நீக்கப்பட்டிருந்தாலும், தலித் மக்களை ‘படியாள்’ என்கிற பெயரில் கொத்தடிமைகளாக ஆதிக்க வகுப்பினர் தங்களது நிலங்களில் வேலை செய்வதற்கு நிரந்தரமாக அமர்த்தி கொடூரமான முறையில் விவசாய வேலைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். இவர்களுக்கு எந்த உரிமையும் வழங்கப்பட்டதில்லை. இதனடிப்படையில் தலித் மக்களின் பொருளாதார விடுதலைக்காகவும், சுய தன்மையுடன் வாழவும் பஞ்சமி நிலங்கள் அரசால் வழங்கப்பட்டன.
தாழ்த்தப்பட்ட, தலித் இன மக்களுக்கு அரசால் வழங்கப்பட்ட இலவச பஞ்சமி நிலங்கள் காலப்போக்கில் நிபந்தனைகளுக்கு விரோதமாக தலித் இனத்தை சாராதவர்களுக்கு 2.5 லட்சம் ஏக்கர் நிலம் கைமாறியுள்ளதாக தமிழகத்தின் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இதனால் லட்சக்கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலங்கள் வேறு இனத்தவருக்கு பதிவாளர் அலுவலகத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய்க்கு பகிரங்கமாக விற்கப்பட்டுள்ளது.
தலித் இன மக்களின் பயன்பாட்டிற்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கியவர்கள் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குகள் உயர்நீதிமன்ற அமர்வால் ஏப்ரல் 2010 ஆண்டிலேயே நீதிபதி பிரபா ஸ்ரீதேவனால் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை இணையத்தளத்தில் கொண்டு வருவது போல ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலம் பற்றிய விவரங்களையும் இணையத்தளத்தில் வெளியிடுவதோடு , பஞ்சமி நில மீட்புக்கு ஒரு ஆணையத்தை அமைக்கவும் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பாக வலியுறுத்துகிறேன்