Cinema Movies Entertainment Events & Launches Home Life & Styles News Public News

திரைப்படப் பாடல்களின் இசை உரிமை தயாரிப்பாளருக்கே சொந்தமாக வேண்டும் : தயாரிப்பாளர் கே ராஜன் பரபரப்பு பேச்சு!

ஸ்ரீ சாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பி. பாண்டுரங்கன் தயாரிப்பில் கஜேந்திரா இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் குற்றம் தவிர். அட்டு படப் புகழ் ரிஷி ரித்விக் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.ஆராத்யா நாயகி.சித்தப்பு சரவணன், சென்ராயன், வினோதினி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

 

படத்திற்கு பி.கே.எச் தாஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.

குற்றம் தவிர் படத்தின் தொடக்க விழா இன்று சென்னை பிரசாத் லேபில் உள்ள பிள்ளையார் கோயிலில் பூஜையுடன் நடைபெற்றது.

படத்தின் தொடக்க விழாவில் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன் விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்திப் பேசும்போது,

“பல நல்லவர்களை எல்லாம் அழைத்து இந்த விழா நடைபெறுகிறது.ஸ்ரீ சாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில் நல்ல கதை அம்சம் உள்ள படமாக இந்த குற்றம் தவிர் படம் உருவாக இருக்கிறது.

நாட்டில் உள்ளவர்கள் குற்றங்களைத் தவிர்த்து நல்லதை நினைத்து நல்லதைப் பேசி நல்லதைச் செய்ய வேண்டும் என்கிற கருத்தின் அடிப்படையில் குற்றம் தவிர் என்கிற அற்புதமான கதையை இயக்குநர் அமைத்திருக்கிறார்.இப்படத்தின் ஆரம்ப விழாவை ஆடம்பரம் இல்லாமல் எளிமையாகவும் அழகாகவும் நடத்தியிருக்கிறார் தயாரிப்பாளர் .

இந்தப் படம் விரைவில் எடுக்கப்பட்டு நல்ல முறையில் வெளியாகி தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுதும் மக்களிடம் நல்லாதரவைப் பெற வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.

கே. ராஜன் தொடர்ந்து அண்மையில் நிலவும் பாடல்கள் உரிமை பற்றி பேசும்போது,

“ஒரு படத்தின் பாடல்களின் உரிமை தயாரிப்பாளருக்கே சொந்தம்.ஒரு படத்தின் பாடல் மொத்தமாக இசை என்பதேதயாரிப்பாளருக்குத்தான் சொந்தம். ஏனென்றால் கதையை நாங்கள் தேர்ந்தெடுத்து, இயக்குநருடன் பேசி, கதாநாயகனுடன் பேசி, பிறகு இசையமைப்பாளருடன் பேசுகிறோம்.இயக்குநர் கதைக்கேற்ற சூழலைச் சொல்லி அதற்கு ஏற்ற மெட்டை இசையமைப்பாளரிடம் இயக்குநர்தான் வாங்குகிறார்.

இயக்குநர் செல்லும் வேலையைத்தான் இசையமைப்பாளர் செய்ய வேண்டும்.இசையமைப்பாளர் தன்னிச்சையாக தன் இஷ்டத்திற்கு எதுவும் செய்ய முடியாது.10 ட்யூன் வாங்குவோம் சில நேரம் 25 ட்டன் கூட வாங்கித் தேர்ந்தெடுப்போம்.

கொத்தனார் வீடு கட்டுகிறார்.அந்த கொத்தனார் தினசரி கட்டிடம் கட்டுகிறார் அவருக்குக் கூலி கொடுத்து விடுகிறோம்.கட்டட வேலைகள் எல்லாம் முடிந்து கிரகப்பிரவேசம் செய்யும் போது அந்தக் கட்டடம் எனக்குத் தான் சொந்தம் ,நான்தான் கட்டினேன் என்று சொன்னால் எப்படி முட்டாள்தனமாக இருக்குமோஅதைப்போல எங்கள் இசை இசையமைப்பாளருக்குத் தான் சொந்தம் என்று சொல்வது மிகப்பெரிய தவறு.நாங்கள் அதற்குரிய சம்பளத்தைக் கொடுத்து விட்டோம் .அவர் எங்களுக்கு வேலை செய்தார்.அது யாரா இருந்தாலும் சரி. இன்று அது வழக்கில் இருக்கிறது எங்களுக்கு சாதகமாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்குத் தான் பாட்டும் இசையும் சொந்தம் .

அவர் ஒரு பெரிய இசைஞானி அதில் எந்த சந்தேகமும் இல்லை. பெரிய பேராசையின் காரணமாக பணத்தின் மீது அளவுக்கு அதிகமாக ஆசைப்படுகிறார். அவர் செய்வது அத்தனையும் சரியில்லாதது . பாடலைப் பாடுபவர்கள், வாத்தியங்கள் வாசிப்பவர்கள், வரிகள் எழுதுபவர்கள் அவர்களுக்குச் சொந்தம் இல்லையா? இவை அத்தனையும் தவறானது. ஒரு தயாரிப்பாளருக்குத் தான் பாடல்கள் அத்தனையும் சொந்தம் “என்றார்.

படத்தில் நடிக்கும் நடிகர் சித்தப்பு சரவணன் பேசும் போது.

“இயக்குநர் ஒரு நல்ல கதை சொன்னார். அதில் ஆக்சன், திரில்லர், லவ் என அனைத்தும் கலந்திருந்தது.நல்லதொரு கமர்சியல் படமாக இருந்தது.

இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது .அதனால் நடிக்க உடனே ஒப்புக்கொண்டேன்.இன்று இங்கே பூஜையின் சிறப்பாக நடைபெற்றுள்ளது இந்தக் கதையை நான் முழுதும் கேட்டுள்ளேன். அதற்கான திரைக்கதை வேலையை முழுதாகச் செய்து முடித்துள்ளார்கள். இந்த படம் நல்ல படமாக உருவாகும். படம் வெற்றி பெற ஆண்டவனை வேண்டுகிறேன். “என்றார்.

நாயகன் ரிஷி ரித்விக்

பேசும்போது,

” அட்டு படத்திற்கு பிறகு நான் இதில் நடிக்கிறேன். இயக்குநர் தயாரிப்பாளர்

பெங்களூரில் இருந்து வந்திருப்பதாகச் சொன்னார்கள். நான் கன்னடம் என்று நினைத்தேன் .ஆனால் அவர்கள் தமிழ்நாடு தமிழ் என்று சொன்னார்கள்.படத்தின் கதை அருமையான கதை.இந்தப் படம் ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. படத்தில்

காதல், செண்டிமெண்ட்,நாயகன் வில்லன் மோதல் என அனைத்தும் கலந்து இருக்கும். புதிய படக்குழுவுக்கு ஊடகங்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள். எங்களுக்கும் ஆதரவு கொடுங்கள்”என்றார்.

படத்தை ஸ்ரீ சாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் தயாரிப்பாளர் பி. பாண்டுரங்கன் பேசும் போது,

” இங்கே சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் கே .ராஜன் சாரை யூடியூபில் தான் பார்த்திருக்கிறேன். இவ்வளவு விரைவில் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை .அவரது ஆசீர்வாதம் எங்களுக்கு இருக்கிறது.

இயக்குநர் சொன்ன கதை எனக்குப் பிடித்திருந்தது. அதற்குப் பிறகு நடிப்பவர்களைத் தேடினோம். சரவணன் சாரை சந்தித்த போது பெங்களூரில் இருந்து நாங்கள் வந்திருப்பதை அறிந்ததும் எந்த நிபந்தனையும் இல்லாமல் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் .சம்பளமே பேசவில்லை .அவரது நல்ல உள்ளத்துக்கு நன்றி.

அதேபோல் சென்ராயனும் நடிக்க ஒப்புக்கொண்டார். ஹீரோவும் பெரிய ஆதரவாக இருக்கிறார். அப்படித்தான் ஹீரோயினும் மதிமாறன் படத்திற்குப் பிறகு இதில் நடிக்கிறார்.படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக இருக்கும் ஜாக்குவார் சென்னப்பா கன்னடத்தில் 85 படங்கள் செய்துள்ளார். 500 படங்களில் ஸ்டண்ட் கலைஞராக நடித்துள்ளார்.கே ஜி எப் பிலும் பணியாற்றியுள்ளார்.இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவைச் சந்தித்தபோது மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அப்போது எங்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை கிடைத்தது.அப்படி ஒரு எனர்ஜி அவர்.

நமது கேமரா மேன் தாஸ் கன்னடத்தில் ரவிச்சந்திரன், விஷ்ணுவர்தன், சிவராஜ் குமார் போன்ற பெரிய கதாநாயகர்கள் படங்களில் பணியாற்றியவர். பி. வாசு சார் கன்னடத்தில் படம் எடுத்தால் இவரை வைத்து தான் ஒளிப்பதிவு செய்வார். 100 படங்களுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.மூன்று மாநில விருதுகள் வாங்கியவர்.இப்படிப் பலரும் இணைந்திருக்கிறோம்.

படத்தை ஆதரித்து வெற்றி பெறச் செய்யும்படி ஊடகங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

படத்தின் இயக்குநர் கஜேந்திரா பேசும்போது,

“நாட்டில் புதிது புதிதாக நோய்கள் வருவதாகக் கண்டுபிடிக்கிறார்கள் அது போல புதிது புதிதாகக் குற்றங்கள் நடக்கின்றன .அப்படி ஒரு குற்றத்தைக் கதாநாயகன் கண்டுபிடிக்கிறார் .அதைத் தடுக்க நினைக்கிறார்.

அப்போது அவர் எதிர்கொள்கிற பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கிறது.

விளைவு என்ன என்பதுதான் படத்தின் கதை.

படத்தில் நல்ல கருத்தைச் சொல்லி இருக்கிறோம்.

நாட்டில் நடந்த மிகப்பெரிய ஸ்கேம் பற்றிப் படத்தில் விரிவாகக் கூறி இருக்கிறோம் .படம் வந்ததும் அது பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும் .அப்படிப்பட்ட பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் படத்தைப் பார்க்கும்போது தங்கள் கதையாக உணர்வார்கள். படத்தை இரண்டு ஷெட்யூலில் முடிக்கப் போகிறோம் .சென்னை, பெங்களூர் என்று படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

புதிய படக்குழு என்று பாராமல் தயாரிப்பாளர் நாங்கள் கேட்ட வசதிகள் எல்லாம் செய்து கொடுத்து உதவுகிறார்.அவருக்கு எங்கள் நன்றி “என்றார்.

நடிகர் சென்ராயன் பேசும்போது,

” வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பார்கள். இயக்குநரையும் தயாரிப்பாளரையும் பார்த்தபோது பெங்களூர் என்றார்கள். பேசிப் பார்த்து தான் தெரிகிறது .அவர்கள் தமிழ் என்று.இயக்குநர் என்னிடம் கதையைச் சொன்னார் .என்னுடைய பாத்திரத்தையும் சொன்னார். மிக நன்றாக இருந்தது’என்றார்.

நாயகியாக நடிக்கும் ஆராத்யா பேசும்போது

“எல்லாரும் சொன்ன மாதிரி சமூகத்திற்குத் தேவையான கருத்து சொல்கிற படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இதில் எனக்கு நல்லதொரு கதாபாத்திரம் .

மதிமாறன் படத்திற்குப் பிறகு

நடிப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக இந்தப் படம் அமைந்துள்ளது. நல்லபடியாக படத்தை முடிப்போம் உங்கள் வாழ்த்துக்கள் தேவை” என்றார்.

Back To Top