Cinema Movies Entertainment Home News Public News

திரையின் மறுபக்கம், சினிமாமீது அக்கறையுள்ள கலையாக்கம்

திரைத்துறை பற்றி எதுவுமே தெரியாதவர் தயாரிப்பாளராகி சினிமா எடுத்து சீரழியும் கதை.

குடித்த டீக்கு காசு கொடுக்கக்கூட சிரமப்படுகிற, சினிமா இயக்குநர் என சொல்லிக் கொண்டு பந்தாவாக திரிகிற அந்த நபரிடம், பிரபல நடிகருடன் போட்டோ எடுத்துக் கொள்வதை வாழ்வின் பெரிய ஆசையாக கொண்டிருக்கிற அப்பாவி மனிதர் ஒருவர் சிக்குகிறார். அவரிடம், ‘நீங்கள் சினிமா எடுத்தால், யாருடன் போட்டோ எடுத்துக் கொள்ள நினைக்கிறீர்களோ அவருடன் மேடையிலேயே சேர்ந்து உட்காரலாம்’ என்று வலை விரிக்கிறார் அந்த இயக்குநர். அந்த அப்பாவி, அவர் விரித்த வலையில் விழுகிறார். நிலத்தை விற்று படம் தயாரிக்க முன்வருகிறார்.

சினிமா பற்றி எதுவுமே தெரியாத தயாரிப்பாளர், சினிமா எடுக்கவே தெரியாத இயக்குநர் இருவரும் கூட்டணியமைத்து எடுத்த படம் எப்படி வந்தது, அது என்ன மாதிரியான விளைவுகளைத் தந்தது என்பதே கதையின் போக்கு… இயக்கம் நிதின் சாம்சன்

‘எப்படி எடுத்தால் ரசிகர்களைக் கவரலாம்’ என்ற யோசனை, தெளிவு, அறிவு என எதுவுமே இல்லாமல் ஏமாந்த தயாரிப்பாளரை சுரண்டி படம் எடுத்து முடிப்பதாகட்டும், எடுத்த படத்தை ஆஹாஓஹோவென தானே புகழ்ந்து கொள்வதாகட்டும், ஆர்யாவுடன் அப்பாயின்ட்மென்ட், சிம்புவுடன் சூட்டிங் என்பது போல் கெத்து காட்டுவதாகட்டும் தனக்கான அலட்டலான பாத்திரத்தில் அலட்டலின்றி நடித்திருக்கிறார் நடராஜன் மணிகண்டன்.

‘நடித்து புகழ்பெற வேண்டும்’ என ஆசைப்பட்டு அதற்கான முயற்சியிலிருப்பவராக அழகான, இளமையான ஹேமா ஜெனிலியா. ‘உன்னை நயன்தாரா ரேஞ்சுக்கு உருவாக்குகிறேன்’ என ஆசைகாட்டும் உதவாக்கரை இயக்குநரின் பேச்சை, கண்ணை இல்லையில்லை மூளையை மூடிக் கொண்டு நம்புவது, அவரிடம் சூர்யாவுக்கு தன்னை ஜோடியாக்கச் சொல்வது என நடிப்பில் அப்பாவித்தனத்தின் உச்சத்தைக் காட்டி ஏற்ற பாத்திரத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

வழக்கமாக தனது உடலின் செழுமையான அத்தனை தசைகளும் குலுங்க ஆடி சூடேற்றுகிற ரிஷா ‘ஆடாம ஜெயிப்போமடா’ ரேஞ்சுக்கு, ஆட்டம் எதுவும் போடாமல் நீச்சல் குளத்தில் கொஞ்ச நேரம் நீந்தியே அந்த கடமையைச் செய்திருக்கிறார்!

‘உலகின் சிறந்த ஏமாளி’ என்ற பட்டம், விருது என எதை தந்தாலும் அதை பெறுவதற்கு தகுதியான ஒரே நபர் இவர்தான்’ என சிபாரிசு செய்கிற அளவுக்கு பரிதாபப்பட்ட ஜீவனாக முகமது கெளஷ். ஆர்வக்கோளாறு இயக்குநரிடம் மாட்டி திரைப்படம் என்கிற பெயரில் தரமில்லாத காட்சிகளை எடுத்து வைத்துக் கொண்டு, வெளியிடுவதற்கான வாய்ப்புகளை முயற்சித்து, பலரிடமும் ஏமாந்து நஷ்டப்படுகிற காட்சிகளில் மிகமிக பொருத்தமான ‘ஐயோ பாவம்’ நடிப்பை அள்ளித் தந்திருக்கிறார். பாண்டியராஜனின் ‘ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்’ படத்தில் வரும் ‘பிம்பிளிக்கா பிளாப்பி’ சாயலில் அமைந்த சற்றே ரசிக்கும்படியான காட்சியும் படத்தில் உண்டு.

பட விநியோகஸ்தரை அறிமுகப்படுத்த பணம், சென்சாரில் யூ சர்டிபிகேட் பெற பணம் என திரையுலகின் மறுபக்கம் தெரியாத ஒருவர் தயாரிப்பாளரானால் அவரிடம் யார் யாரெல்லாம் ஏமாற்றி எப்படியெல்லாம் கரன்சியைக் கறப்பார்கள் என்பதை இதைவிட விரிவாக யாரும் விளக்க முடியாது என்கிற அளவுக்கு பாராட்டும்படியான காட்சிகளைச் சுருட்டியிருக்கிற இயக்குநர் நிதின் சாம்சன், படத்துக்குள் உருவாகும் படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். மனிதர் ஒளிப்பதிவு உள்ளிட்ட இன்னும் சில பணிகளையும் சுமந்துள்ளார்; கதைக்களத்துக்கு போதும் என்கிற அளவில் அதனை செய்துள்ளார்.

சினிமாவில் தயாரிப்பாளரை எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள் என்பது பற்றி ஒரு சதவிகிதம் கூட அறியாதவராக வருகிற மேனேஜரிலிருந்து இன்னபிற பாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்பு பரவாயில்லை ரகம்!

போகிறபோக்கில், கடனை திருப்பிக் கொடுக்க முடியாத பட்சத்தில் கடன் கொடுத்தவர்கள் மிரட்டினால் அது பற்றி போலீஸிடம் புகார் கொடுக்கலாம் என்ற விழிப்புணர்வையும் விதைத்திருக்கிறது இந்த படம்!

அனில் நலன் சக்ரவர்த்தி, ரித்திக் மாதவன் இசையில், நம்மைச் சுற்றியுள்ள சக மனிதர்களும் கார்ப்பரேட் உலகமும் நம்மை எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள் என்பதை எடுத்துச் சொல்கிற ‘ஏமாந்து போடா முட்டாளே’, காதல் உணர்வை அதன் தன்மையோடு சொல்கிற ‘ஒருமுறை பார்த்தால் உயிர் போகும்’, கதையோட்டத்தின் சரியான தருணத்தில் வருகிற ‘ஆசையிலும் பேராசை’ என்ற பாடல்கள் மனதில் நிற்க அடம்பிடித்தாலும் கேட்கும்படியிருக்கிறது.

திரையுலகின் பின்னணியில் நடக்கும் அநியாய அக்கிரமங்களை வெளியுலகுக்கு வெளிச்சம்போட்டுக் காட்ட நினைத்த இயக்குநர் அதை இன்னும் கொஞ்சம் வலுவான திரைக்கதையுடன், தேர்ந்த நடிகர் நடிகைகளின் பங்களிப்புடன் தந்திருக்கலாம்!

உருவாக்கத்தில் சிலபல குறைகள் இருந்தாலும் ‘திரையின் மறுபக்கம்’ சினிமாமீது அக்கறையுள்ள கலையாக்கம்!

Back To Top