தூத்துக்குடி மாவட்டத்தில் ஏழை, எளியவர்களுக்கு பெருமளவில் உதவிகளை செய்து வந்தவர் தான் வெங்கடேச பண்ணையார். மும்பை வாழ் தமிழர்களின் சில கோரிக்கைகளுடன் மகாராஷ்டிர முதலமைச்சர் சுசில் குமார்ஷிண்டேவையும் சந்தித்துப் பேசியுள்ளார். இப்படி மக்கள் நலனில் அக்கறை செலுத்தி வந்த வெங்கடேச பண்ணையாருக்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களில், குறிப்பாக தூத்துக்குடி மாவட்ட நாடார் இனத்தின் மத்தியில் பெரும் செல்வாக்கு இருந்தது. நாடார் இனத்தினரை பிறர் தாக்கும்போது நாடார்களுக்கு ஆதரவாக களம் இறங்கியவர் வெங்கடேச பண்ணையார்.
இப்படி நாடார் சமூகத்திற்காக இருந்த வெங்கடேச பண்ணையார் 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ஏரிக்கரைச் சாலையில் போலீசாரால் சுட்டுக் படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரது நினைவு தினத்தை ஒட்டி நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. அதில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா வெங்கடேச பண்ணையாருக்கு மரியாதை செய்தார். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டச் செயலாளர்கள் சின்னதுரை, ராமச்சந்திரன், விருதுநகர் மாவட்ட செயலாளர் டேனியல் மற்றும் கட்சி நிர்வாகிகள் இணைந்து வெங்கடேச பண்ணையாருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.